தேவகவுடாவை ராஜ்யசபாவுக்கு அனுப்பக் காங்கிரஸ் ஆதரவு..

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா இடங்களை நிரப்ப வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் கட்சியான பா.ஜ.க. இரண்டு இடங்களில் எளிதாக வெற்றி பெற முடியும்.

எதிர்க்கட்சிகளான காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒருங்கிணைந்து நின்றால் எஞ்சிய இரு இடங்களை வெல்லலாம்.

வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் பா.ஜ.க.வில் கடும் போட்டி நடக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்கே வெற்றி பெறத் தேவையான ஓட்டுகள் நீங்கலாக, காங்கிரஸ் கட்சியிடம் உபரியாக 24 வாக்குகள் உள்ளன.

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் உபரி ஓட்டுகளை தேவகவுடாவுக்கு அளிக்கத் தயாராக இருப்பதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 இதனை தேவகவுடா ஏற்றுக்கொள்வார் எனத் தெரிகிறது.

கடந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, கர்நாடகத்தில் தோல்வி அடைந்ததால் , கூட்டணி உடைந்தது.

கூட்டணி ஆட்சியும் கவிழ்ந்தது.

இந்நிலையில் ,காங்கிரஸ் கட்சி,தேவகவுடாவுக்கு ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு அளிப்பதன் மூலம், கர்நாடக மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மலரும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 –  பா.பாரதி