டில்லி,

மிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களு டன் விரிவான ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் கோரணமாக, சசிகலாவும், தமிழக முதல்வர் ஓபிஎஸ்சும் தனித்தனி யாக நிற்கிறார்கள். அதையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்கே என கூறி, சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க முயன்று வருகிறார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா ஆதரவாளர்களால் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். ஒருசிலர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருகின்றனர். இதன் காரணமாக மற்ற கட்சிகளின் ஆதரவை பெற இருவரும் முயன்று வருகிறார்கள்.

முதலில் ஓபிஎஸ்-சுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று கூறிய ஸ்டாலின், பின்னர் பல்டி அடித்துவிட்டார். இந்நிலையில் தமிழக காங்கிரசின் ஆதரவை பெற சசிகலா முயற்சித்து வருகிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் சசிகலாவுக்கு நேரிடையாக  ஆதரவு அளித்து வருகிறார். ஆனால், மூத்த தலைவர்களான சிதம்பரம், இளங்கோவன் போன்றோர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரும் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் உத்தர விட்டது.  அதன்பேரில் டெல்லிசென்றுள்ள  தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அங்கு  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

இந்த கலந்துரையாடலில்,  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரி அனந்தன், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் ராகுல்காந்தி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  கூறியதாவது:-

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல்காந்தி எங்களிடம் கேட்டார்.  நாங்கள் விரிவாக எடுத்துக்கூறினோம். இது தொடர்பாக எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை என்றார்.

மேலும்,  சட்டத்துக்கு உட்பட்டு, பாராளுமன்ற சட்டமன்ற விதிமுறைகள், முன்னுதாரணத்துக்கு உட்பட்டு தமிழக கவர்னர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும்,

தமிழகத்தில் தற்போது  அரசு செயல்படாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதை தவிர்க்க  கவர்னர்  சுதந்திரமாக செயல்பட வேண்டும்,  அவர் முடிவு எடுத்த பிறகுதான் அது சரியா, தவறா? என்று கருத்து சொல்ல முடியும் என்றார்.

மேலும், பா.ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எந்த வித அஸ்திவாரமும் கிடையாது. அது தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கிறது.

ஜனாதிபதி தேர்தல், வர இருக்கிற தேர்தல்களை மனதில் கொண்டு, வட மாநிலங்களில் எப்படி அரசியல் விளையாட்டு விளையாடியதோ அதைப்போல தமிழ்நாட்டிலும் விளையாட மோடி அரசு நினைக்கிறது. அது தவறு என்றார்.

மேலும் அகில இந்திய காங்கிரஸ்.  துணைத்தைலைவர் ராகுல்காந்தியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நான் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.