இம்பால்: நாகா ஒப்பந்தம் மற்றும் அதுதொடர்பான சிக்கல்களை ஆராய்வதற்காக, வடகிழக்கிற்கு சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் குழுவினர், ஞாயிறன்று இம்பால் சென்றடைந்த நிலையில், திங்களன்று இம்பாலை விட்டு புறப்பட்டனர்.

அவர்கள் சில வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்து நிலைமையை ஆராயவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்குழுவினர் நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.

அந்த மாநில மக்கள் இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஒரேவிதமாக அச்சத்தைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தியின் அறிவுறுத்தலின்பேரில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக இருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ்.

“இந்த ஒப்பந்தம் வடகிழக்கு மாநிலங்களில் நலன்களைப் பாதித்தால், அதைப்பார்த்துக் கொண்டு காங்கிரஸ் அமைதியாக இருக்காது என்றும், மக்களின் நல்வாழ்வைப் பணயம் வைத்த எந்த தீர்வும் எட்டப்படக்கூடாது என்றும் ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

“ஒரேயொரு தரப்பை திருப்திப்படுத்த, இதரப் பிரிவினரின் நலன்கள் காவுகொடுக்கப்பட்டால், காங்கிரஸ் அமைதியாக இருக்காது” என்று மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி தெரிவித்துள்ளார்.