டில்லி

வாக்குச் சாவடி முகவர்களிடம் உள்ள விவரத்தைக் கொண்டு மின்னணு வாக்கு இயந்திரங்களை காங்கிரஸ் கட்சி சோதிக்க உள்ளது.

தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு வாக்கு இயந்திரங்களை முழுவதுமாக பயன்படுத்தி வருகிறது.    எதிர்க்கட்சிகள் இந்த வாக்கு இயந்திரங்களில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுப்பி வருகின்றன.    ஆயினும் தேர்தல் ஆணையம் இதை மறுத்து வருகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்துடன் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.   வாக்காளர் வாக்களித்த உடன் இந்த இயந்திரத்தில் அவர் வாக்களித்த சின்னம் சுமார் 10 விநாடிகளுக்கு தெரியும்.   இம்முறையிலும் பல புகார்கள் எழுந்துள்ளது.

படிவம் 17 (சி) மாதிரி

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் கட்சி முகவர்களிடம் படிவம் 17 (சி) அளிக்கப்படுகிறது   இந்த படிவத்தில் மின்னணு வாக்கு இயந்திர விவரங்கள்,  பதிவான வாக்குகளின் ஆரம்ப மற்றும் கடைசி வரிசை எண் மற்றும் மொத்தம் பதிவான வாக்குகள் ஆகிய விவரங்கள் இருக்கும்.

காங்கிரஸ் கட்சி தங்களுடைய மக்களவை வேட்பாளர்களிடம் இந்த படிவம் 17(சி) நகலை உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.   இதன் மூலம் காங்கிரஸ் கட்சி வாக்குப்பதிவின் போது வாக்கு இயந்திரங்களை சோதிக்க உள்ளது.

இது குறித்து அனுப்பப்பட்ட் சுற்றரிக்கையில், படிவம் 17(சி) யில் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையும் வாக்கு எண்ணிக்கையின் போது உள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கையையும் சோதனை இடப்போவதாகவும் அதற்காக படிவம் 17(சி) யின் நகல் உடனடியாக கட்சி தலைமையக்த்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.