Random image

குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் : காங்கிரஸ் முடிவு

கமதாபாத்

குஜராத் மாநில பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

தற்போது குஜராத் மாநிலத்தில் ஆட்சி புரியும் பாஜக அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டுக்ள் தெரிவித்து வருகின்றன.  சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் சைலேஷ் பர்மார் பாஜக அரசு இந்த  ஒன்பது மாத ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.   அனைத்து எதிர்க்கட்சிகளும் அவருடைய கருத்தை ஆமோதித்துள்ளன.

இதை ஒட்டி குஜராத் மாநில பாஜக அரசு மீது வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.   அதற்கான மனுவை சட்டப்பேரவை சபாநாயகரிடம் சைலேஷ் பர்மார் அளித்துள்ளார்.   இது குறித்து சபநாயகர் ராஜேந்திர திவேதி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்தால் வரும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில்  இது குறித்து விவாதம் நடைபெறும் எனவும் விவாத முடிவில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.    அந்த விவாதம் மூன்று நாட்கள் வரை நடக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

தற்போது சட்டப்பேரவையில் 182 இடங்களில் 99 இடங்கள் பாஜகவுக்கும். 76 இடங்கள் காங்கிரஸுக்கும் உள்ளன.  மூன்று சுயேச்சை உறுப்பினர்களும் இதர கட்சிகளில் மூவரும் உள்ளனர்.  ஒரு இடம் காலியாக உள்ளது.   ஆகவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தினால் அரசுக்கு அபாயம் இல்லை என பாஜக தெரிவித்துள்ளது.   ஆனால் பாஜக தரப்பில் உள்ள அதிருப்தியாளர்கள் கட்சி மாறி ஓட்டளிக்க அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கூறி வருகிறது.