Random image

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து 10ந்தேதி ‘பாரத் பந்த்’: காங்கிரஸ் கட்சி அழைப்பு

டில்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து 10ந்தேதி நாடு முழுவதும்  ‘பாரத் பந்த்’ நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மாற்றம் அமல்படுத்தப்பட்ட பிறகு, வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இது சாமானிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும், கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், அகமது பட்டேல், மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன கார்கே, ரன்தீப் சிங் சுரேஜ்வாலா ஆகியோர் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களுள் ஒருவராக தாங்களும் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிவித்தனர்.

இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு   51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இதை காரணமாக வைத்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

டாக்சி, ஆட்டோ  கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

.பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தால், விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. இந்நிலையில், அதிகரித்துக்கொண்டே செல்லும் பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி, 10-ந்தேதி, நாடுதழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.  இந்த போராட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிஸ் தலைவர்கள், வரும் 10ந்தேதி நாடு முழுவதும் பந்த் நடைபெறும் என்று அறிவித்தனர்.

தொடர்ந்து பேசிய தலைவர்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்கு கொண்டு வந்தால்,  அதன் விலையை லிட்டருக்கு 10-15 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறினர்.

மேலும், ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும்,  கடந்த ஒரு வருட காலத்தில் ரூபாய் மதிப்பில் 10 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளது, இது ஆசியாவில் மிகக் குறைவான நாணயமாகும்,  ஆனால் பிரதம மந்திரி அல்லது நிதி மந்திரி அதைப் பற்றி கவலைப்படவில்லை” என்று அவர் கூறினர்.

இந்த பாரத் பந்தானது காலை  9 மணி முதல் மதியம் 2.30-3 மணி வரை நடைபெறும் என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் சிரமப்பட மாட்டார்கள் என்றும் கூறினர்.