சேலம் உருக்காலை தனியார் மயமாக்கலை எதிர்த்து காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம்

சேலம்

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வரும் 29 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளது.

 

சுமார் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் சேலம் உருக்காலையில் சுமார் 1200 நிரந்தர ஊழியர்களும் 800 க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ரூ.2972 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் துருப்பிடிக்காத இரும்பு 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என அழைக்கப்படும் இந்த இரும்பு உற்பத்தியில் உலக அளவில் 12 இடங்களுக்குள் உள்ளது.

இந்த சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முயன்று வருவதாக வந்த தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்குப் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த உருக்காலை தொழிற்சாலைகள் தனியார் மயமாக்கலை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கே எஸ் அழகிரி, “சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆலை இவ்வாறு நஷ்டத்தில் இயங்க இந்திய உருக்கு ஆணைய நிர்வாகமே காரணம் ஆகும். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வரும் 29 ஆம் தேதி அன்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது “ எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி