அடல் சுரங்கப்பாதையில் சோனியா நாட்டிய அடிக்கல் அகற்றம் : காங்கிரஸ் போராட்டம்

--

ரோடங்க்

லகின் நீளமான சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையில் சோனியா காந்தி நாட்டிய அடிக்கல் அகற்றப்பட்டதற்காக காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது.

இமாசலப்பிரதேசத்தில் ரோடங்க் பகுதியில் அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.  மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை ஆகும்.  இந்த பாதையைக் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி அன்று இந்த பாதைப் பணி தொடக்க விழாவின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அடிக்கல் நாட்டி உள்ளார்.  அந்த அடிக்கல் தற்போது அகற்றப்பட்டுள்ளது.   இது இமாசலப் பிரதேச காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஞால்சான் தாகுர் இது குறித்து கிலாங் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  மேலும் பாஜகவின் இந்த விஷமத்தனமான நடவடிக்கை பொறுக்க முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

இமாசல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்  குல்தீப் கிஷோர் அம்மாநில முதல்வர் ஜெயராம் தாக்குருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாட்டிய அடிக்கல்லை அகற்றியது மிகவும் தவறான நிகழ்வாகும்.  இவ்வாறு செய்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த அடிக்கல்லை அங்கே வைக்க வேண்டும்.

இதை நீங்கள் இன்னும் 15 தினங்களுக்குள் செய்ய வேண்டும்.  அப்படி இல்லையெனில் காங்கிரஸ் கட்சி மாநில அளவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும்.   இந்த அடிக்கல் அகற்றமானது ஜனநாயக விரோதம் மட்டுமின்றி சட்டத்துக்கு எதிரான செயல் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.