டில்லி

பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு விவசாயிகள் போராட்டம் 700% அதிகரித்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து விவசாயிகளுக்கு விரோதமாக நடந்துக் கொள்வதாக கடும் புகார்கள் எழுந்துள்ளன.  விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கடும் துயருற்ற வேளையில் மத்திய அரசு மேலும் அவர்களைத் துயரத்தில் ஆழ்த்தி வருவதாகக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. பல தரப்பட்ட மக்களும் இந்த குறையை தெரிவித்துள்ளனர்

குறிப்பாக விவசாயப் பொருட்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தாதது, விவசாயக் கடன் வசூல் கெடுபிடி ஆகியவை ஏற்கனவே விளைச்சல் இல்லாமல் உள்ள விவசாயிகளுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.   இதனால் பல மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளன.   இது குறித்து கடும் போராட்டம் நடந்து வருகிறது.  இந்த போராட்டங்களின் எண்ணிக்கை 700% வரை அதிகரித்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறி உள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டரில், “பாஜக அரசின் விவசாயக் கொள்கைகளை விவசாயிகளே எதிர்த்து வருகின்றதன் வெளிப்பாடே இந்த அளவுக்குப் போராட்டங்கள் அதிகரிப்புக்குக் காரணம் ஆகும்.   நாம் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்போம்” எனப் பதிந்துள்ளது.