புலம்பெயர்ந்தோருக்கு 1,000 பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்யும்: யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா கடிதம்

டெல்லி: புலம்பெயர்ந்தோருக்கு 1,000 பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி தந்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் போது சாலை விபத்துகளில் பலர் விபத்துகளில் இறக்கின்றனர். இந்த விபத்துகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன.

இந் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:

உத்தரப்பிரதேசத்தில் வெவ்வேறு சாலை விபத்துக்களில் குறைந்தது 65 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர், இது மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்து செல்லும்போது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கின்றனர், அவர்களுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. காசிப்பூர் மற்றும் நொய்டா எல்லைகளிலிருந்து தலா 500 பேருந்துகளை இயக்க விரும்புகிறோம்.

தேசத்தை காத்துக் கொள்வதாக பேசுபவர்கள் இத்தகைய காலங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ள விட முடியாது என்று அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

இந்த கடிதத்தை உத்தரபிரதேச காங்கிரஸ் பிரிவு தலைவர் அஜய் குமார் லல்லு தலைமையிலான தூதுக்குழு முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைத்தது.

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை இரண்டு லாரிகள் மோதியதில் 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.