அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த ஒருமித்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று ஆரம்பித்தது.    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சியின் கொடியை ஏற்றி 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை துவங்கி வைத்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த, இளம் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

நாடு முழுவதும் இருந்தும் கட்சி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் இதில் பங்குபெறுகிறார்கள்.

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் காங்கிரஸ் மாநாடு இதுவாகும்.

அடுத்த வருடம் (2019) நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலை எதிர்கொள்வது குறித்த திட்டங்களை வகுப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டு இருக்கிறது.

இதில் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதாரம், வெளிநாட்டு விவகாரம், வேளாண்மை, வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிப்பது ஆகியவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியல் நிலவரம் பற்றிய தீர்மானத்தை மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டு இருந்த முக்கிய அம்சங்களாவன:

* அடுத்த வருடம் (2019) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தி அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க ஒருமித்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிகளை பெரிய அளவில் ஒன்றுதிரட்டி தேர்தலை சந்திப்பது.

* தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருவது.  நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த பா.ஜனதா மேற்கொண்டு வரும் நடவடிக்கை தவறானது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

* பணபலத்தின் மூலம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை தடுக்க கட்சி மாறுபவர்கள் 6 வருடங்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைப்பது.

* மத்திய விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்தி, அரசியல் கட்சிகளை பழி வாங்கும் நோக்குடன் பா.ஜனதா அரசு செயல்படுவதை கண்டிப்பது.

* லோக்பால் அமைப்பை நியமிக்காததன் மூலம் ஊழலை ஒழிப்பதில் பா.ஜனதா அரசு மெத்தனமாக செயல்படுகிறது. இதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் செயல்படத்தவறிவிட்டது.

* ஜனநாயக விரோத போக்குடன் பேச்சுரிமை, வெளிப்படையாக கருத்து தெரிவித்தல், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் செயல்படும் மத்திய பா.ஜனதா அரசுக்கும், அதன் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிப்பது.

* பா.ஜனதாவின் ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், முறைசாரா துறை பணியாளர்கள், சுய தொழில் செய்வோர், தலித்துகள், வர்த்தகர்கள், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

* பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் விதமாக நாடு முழுவதும் செயல்படுவதை வன்மையாக கண்டிப்பது.