ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் ‘ராஜா’வாக மாறிய காங்கிரஸ்! பாஜக படுதோல்வி!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.


ராஜஸ்தான் மாநிலத்தில் 49 நகராட்சி அமைப்புகளுக்கு 2,000க்கும் அதிகமான உறுப்பினர்களை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 72 சதவீதம் வாக்குகள் பதிவான. அதிகளவாக நசிராபாத் நகராட்சியில் 91.67சதவீதம் வாக்குகள் பதிவாகின. உதய்பூர் நகராட்சியில் குறைந்த அளவாக 53 சதவீதம் வாக்குகள் பதிவாகின.


வாக்குப்பதிவுக்கு பின்னர் ஓட்டு எண்ணும் பணி இன்று தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வென்று அசத்தியிருக்கிறது. மொத்தமுள்ள 17 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் கட்சியானது 11ல் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜகவுக்கு 3 ல் மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது. மற்ற இடங்களில் சுயேட்சைகள் வென்றிருக்கின்றன.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றி கிடைத்திருப்பது, காங்கிரஸ் முகாமில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெற்றிருக்கிறது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். இது எங்களின் அரசாங்கத்துக்கு மக்கள் அளித்திருக்கும் ஆதரவை காட்டுகிறது. அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.


வெற்றி குறித்து பேசிய காங்கிரஸ் முக்கிய பிரமுகரும், அமைச்சருமான பிரதாப் சிங், ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் 3ல் 2 பங்கு இடங்களை காங்கிரஸ் வென்றிருக்கிறது. இது பாஜகவுக்கு கிடைத்த பாடம். 370வது சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோயில் ஆகிய விவகாரங்களில் பாஜகவை மக்கள் நிராகரித்து உள்ளனர் எனபதையே இது காட்டுகிறது என்று காங்கிரஸ் கூறி இருக்கிறது.

You may have missed