டெல்லி:

டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தியது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் , டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று பிற்பகல் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தோணி,ப. சிதம்பரம், ஆனந்த் சர்மா, கேசி வேணுகோபால், பிரியங்கா காந்தி வதேரா, ஜோதி ராதித்ய சிந்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல்காந்தி கலந்துகொள்ளவில்லை.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் மாணவர்கள் போராட்டம், இந்தியப் பொருளாதார நிலை, ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் மற்றும் அமெரிக்கா – ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழல் என 4 முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும்,  இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரல்கள் ஒடுக்கப்படுவது குறித்தும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.

தீர்மானம் விவரம்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் காரியக் கமிட்டி வலியுறுத்துகிறது

“நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரல்களை ஒடுக்கவும், கட்டுப்படுத்தவும் வலிமை மிகுந்த ஒட்டுமொத்த அரசு அதிகாரத்தையும் மோடி அரசு கட்டவிழ்த்துள்ளது. இளைஞர்களின் நம்பிக்கைக்கு பிரதமரும், பாஜக அரசும் துரோகம் இழைத்துள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

சுயாதீனமாகவும் ஆக்கபூர்வமாகவும் கல்வி கற்பது, குறைந்த செலவில் வேலைவாய்ப்புடன் கூடிய கல்வி முறை, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது உள்ளிட்டவற்றுக்காக போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் காங்கிரஸ் காரியக் கமிட்டி துணை நிற்கிறது.

ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்றும் அங்கு சுதந்திரமான சூழலை மீண்டும் உருவாக்க வேண்டும்.

ஈரான் படைத்தளபதி கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்தும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கவலை தெரிவித்துள்ளது.

பொருளாதாரம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மீட்டெடுப்பதற்கான செயல்திட்டத்தை அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.