டெல்லி:

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற உள்ளது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில்  காங்கிரஸ் கட்சிக்கு  தலைவராக ராகுல் காந்தி மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்து ஆண்டு நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  அவரது ராஜினாமா சில மாதங்களாக ஏற்கப்படாமல் அவரை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. ஆனால், ராகுல் அசைந்து கொடுக்க மறுத்து விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, சோனியா காந்தி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள அக்‍கட்சி அலுவலகத்தில், இன்று பிற்பகல் நடை பெறுகிறது. இதில்,  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்று தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. மேலும்,. பொருளாதார மந்தநிலை, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், மாணவர்கள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.