டில்லி:

போர் பதற்றம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அன்று குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.58 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் குஜராத் மாநிலத்தில் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே பிப்ரவரி 28ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம், புல்வாமா தாக்குதல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 12ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று  காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்  அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்,  மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.  தேசிய கட்சிளான பாஜகவும், காங்கிரசும் ஆட்சியை பிடிக்க காய்களை நகர்த்தி வருகின்றன. இதற்காக கூட்டணிகளை ஏற்படுத்தி தேர்தலை எதிர்கொள்கின்றன.

இந்த பரபரப்பான அரசியல்  சூழ்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக, இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் அகமதாபாதில் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் நடைபெறும்  இக்கூட்டத்தில், கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 58 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கூட்டத்தில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது தாயார் சோனியா மற்றும் சகோதரி பிரியங்கா காந்தியுடன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள் என தெரிகிறது.