காங்கிரஸ் இளைஞர் அணியின் பொறுப்பில் 230 தொகுதிகள்

டில்லி

ரும் மக்களவை தேர்தலில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் இளைஞர் அணி கவனம் செலுத்த வேண்டும் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் கண்டுள்ளபடி புதிய வாக்காளர்கள் தொகை நாடெங்கும் அதிகரித்துள்ளது.   இதில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 12.4  லட்சம் பேர் முதல் முதலாக வாக்களிக்க உள்ளனர்.   எனவே காங்கிரஸ் கட்சி இந்த இளைஞர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் சேகரிக்க ஆர்வம் காட்டி வருகிறது.

அதை ஒட்டி இம்முறை காங்கிரஸ் இளைஞர் அணிக்கு இந்த புதிய வாக்காளர்களை கவரும் பொறுப்பை கட்சி தலைமை அளித்துள்ளது.   கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக காங்கிரசை விட அதிகமாக  230 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  எனவே இந்த 230 தொகுதிகளிலும் இளைஞர் அணி கவனம் செலுத்த வேண்டும் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

அதை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணிப்பிரிவின் தலைவர் கேசவ் சந்த் யாதவ் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க உள்ளார்.    அந்த ஒருங்கிணைப்பாளரின் கீழ் பல குழுக்களாக இளைஞர் அணிகள் இயங்க உள்ளனர்.   அவர்கள் புதிய வாக்காளர்களை காங்கிரஸ் கட்சியின் பக்கம் இழுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள்னர்.

கடந்த தேர்தலின்  போது காங்கிரஸ் கட்சிக்கு இளைய சமுதாயத்தினர் வாக்கு கிடைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தெரிவித்துள்ளது.   கட்சியின் தோல்விக்கு அதுவே முக்கிய காரணம் எனவும் அந்த அணி தெரிவித்துள்ளது.    தற்போது வேலை வாய்ப்பை அமைத்துத் தர பாஜக தவறி உள்ளதால் கோபமடைந்துள்ள இளைஞர்களின் வாக்குகளை இந்த அணி காங்கிரஸ் பக்கம் திருப்ப திட்டமிட்டுள்ளது.

இதைத் தவிர ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இளைஞர் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.   இந்தக் குழுக்கள் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா நிலை, லஞ்சம், விலைவாசி உயர்வு ஆகியவைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்க உள்ளன.   அத்துடன் குழுவினர் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவும் மொபைல் மூலம் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.