மதுரை: வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 31 தப்லீக் ஜமாத் அமைப்பினர் கொரோனா தொற்றின் போது விசா நடைமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டு புழல் மற்றும் சைதை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீது குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யவில்லை. ஆகவே விடுதலை செய்ய வேண்டும் என தப்லீக் ஜமாத்தினர் சார்பில் வாதிடப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு: 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கியதோடு, அவர்கள் யாரும் கொரோனாவை பரப்பியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு 70 நாட்கள் அனுபவித்த சிறைவாசமே போதுமானது. எனவே அவர்களை நாடுகளுக்கு திருப்பி அனுப்ப மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அவசர காலங்களில், எந்த நாட்டையும் விட்டு வெளியேறும் உரிமையைப் பயன்படுத்த முடியும். தற்போதைய தொற்றுநோய்கள் வேறுபட்டவை அல்ல. மனுதாரர்களுக்கு அதிர்ஷ்டவசமாக இதுவரை கோவிட் 19 தொற்று இருக்க வில்லை. நாளை நிலைமை மாறலாம்.

எனவே, இங்குள்ள மனுதாரர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். மனுதாரர்கள் விசா நிபந்தனைகளை மீறியதால், அவர்களை குற்றவாளிகளாக பார்க்க முடியாது.

அவர்கள் அனுபவித்த தண்டனை காலமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமானது. எனவே அவர்களை அவரவர்கள் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிபதி சுவாமிநாதன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.