லக்னோ: இந்தியளவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் முதன்மையானதாக கருதப்படும் பா.ஜ.வின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப்பிரதேசத்தில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறைபட்டவர்களில் கணிசமானோர் பொறியியல் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; உத்திரப் பிரதேச சிறைகளில் உள்ள 3,740 கைதிகளில், 727(20%) பேர் பொறியியல் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இதே பட்டப்படிப்பு முடித்தவர்கள் மராட்டிய சிறையில் 495 பேரும், கர்நாடக சிறையில் 362 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதுமுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில், 5,282 பேர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். உத்திரப்பிரதேச சிறையில் உள்ளவர்களில் 2,010 பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
நாடு முழுவதும் சிறையில் உள்ள 3,30,487 பேரில் 1.67% பேர் முதுநிலை பட்டதாரிகள். 1.2% பேர் பொறியாளர்கள்.
மேலும், கைதாகியுள்ள பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் வரதட்சணை மரணம் அல்லது பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளனர். சிலர் மட்டுமே, பொருளாதார குற்றச் செயல்களில் சிக்கியுள்ளனர். அவர்களின் கல்வித்தகுதி, சிறையில் தொழில்நுட்பத்தை உயர்த்த பயன்படுத்தப்படுகிறது. சிறையில் வானொலி நடத்தி வருகின்றனர். பலர், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளில் ஆசிரியர்களாகவும் மாறியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.