சென்னை:

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெறும் என்று அதிமுக தலைமை தெரிவித்து உள்ளது.  அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு, இன்று தொகுதிகள் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை தொடர்ந்து வருகிறது. கடந்த 15நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த தேமுதிக அதிமுக கூட்டணி சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தமாகா இன்னும் அதிமுக கூட்டணியில் இணையாமல் இழுத்தடித்து வருகிறது.

இன்று அதிமுக தமாகா கூட்டணி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்டணிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்பத குறித்து இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த 2 நாட்களாக  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான  வேட்பாளர்கள் நேர்காணல்  நடைபெற்று வந்தது.

நேற்று முன்தினம் முதல் நாளில் சேலம், நாமக்கல், கரூர் உட்பட 20 தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணா மலை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்பட 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணல் நிறைவடைந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே புதுச்சேரி தொகுதியை என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ள நிலையில், அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 19 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது என்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது.