கட்டுமான நிறுவனம் ஏமாற்றியதால், விளம்பர தூதராக நடித்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு பிடிவாரண்டு!

டில்லி:

பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று, அறிவித்தபடி வீடுகள் கட்டி கொடுக்காமல் ஏமாற்றியதால், அந்த நிறுவனத்துக்கு விளம்பர தூதராக நடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு டில்லி உயர்நீதி மன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

கம்பீர் தூதராக செயல்பட்ட கட்டுமான நிறுவன விளம்பரம்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த காம்பீர், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே  வைத்துள்ளார். தற்போது வயது முதிர்வு காரணமாக பிட்னஸ் இல்லாததால்,  இந்திய அணியில் இடம்பெற முடியாமல் இருந்து வருகிறார். அதன் காரணமாக  அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இவர் புகழின் உச்சத்தில் இருந்த 2011-ம் ஆண்டு உ.பி. மாநிலத்தை சேர்ந்த கட்டு மான நிறுவனம் ஒன்று,  காஸியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டபோவதாக அறிவித்தது. இதற்கு விளம்பர மாடலாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.  அவர்மூலம் விளம்பரப்படுத்தி, வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் கவர்ந்தது.

அதைத்தொடர்ந்து, 17 பேர் காசியாபாத்தில் வீடுகள் வாங்குவதற்காக 1.98 கோடி ரூபாய் அந்த நிறுவனத்திடம் அளித்துள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் உறுதி அளித்தபடி வீடுகளை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தது.

இதனால் அதிருப்தி அடைந்தவர்கள், கட்டுமான நிறுவனம் மற்றும், அதன் விளம்பர தூதர் கவுதம் காம்பீர் மீது வழக்கு தொடர்ந்தனர். அதையடத்து, கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்களான முகேஷ் குராணா, கவுதம் மேத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக கம்பீருக்கு டில்லி உயர்நீதி மன்றம் பல முறை உத்தரவிட்டும் ஆஜராகாததால், அவருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தார்.

அடுத்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட டில்லி தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மணீஷ் குராணா வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.