லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மார்ச் 25ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான நிலத்தில் ராமா் கோயில் கட்டலாம் என்று நவம்பா் 9ம் தேதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீா்ப்பளித்தது. 3 மாதத்துக்குள் ராமா் கோயிலை கட்ட, அதனை மேற்பார்வையிட அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, 11 பேர் கொண்ட குழுவினை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.  பிப்ரவரி 9ம் தேதிக்குள் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் பட்டியலை அரசு வெளியிட வேண்டும்.

குழு அமைக்கப்பட்ட பின்னர் ராமர் கோயில் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பதை குழு உறுப்பினர்கள் முடிவு செய்வர். எனினும் அதன் வடிவமைப்பு என்பது பிரதமர் மோடியால் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி குழு உறுப்பினர்கள் பிப். 9ம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டால்,  மார்ச் 25ம் தேதி ராம நவமி அன்று ராமர் கோயில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக நாடு முழுவதும் நன்கொடைகள் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில், ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் 11 ரூபாய் அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றார்.