ஒரு பக்கம் காச்மூச் – இன்னொரு பக்கம் ஆக்கப்பூர்வ அம்சங்கள்!

த ஹேக்: கொரோனா பரவல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து சீனாவைக் குற்றம் சுமத்திவரும் நிலையில், ஐரோப்பிய யூனியனின் மருந்துகள் நிறுவனமோ, கொரோனா தடுப்பு மருந்தை ஓராண்டில் தயார்செய்ய முடியும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்த நோய் எப்போதும் நம்மை விட்டு விலகாது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதால், இறுதித் தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வ‍ேண்டும் என்று பல உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இப்போதுவரை, கொரோனா மரண எண்ணிக்கை உலகளவில் 3 லட்சத்தை நெருங்குவதாலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையிலும், இந்தக் கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தற்போது உலகெங்கிலும் பல நாடுகளில், ஊரடங்கு தளர்வு நிகழ்ந்தாலும், இந்நோயின் இரண்டாம் அலை பயத்தால், பல வணிக நடவடிக்கைகள் இன்னும் துவங்கப்படாமலேயே உள்ளன. பல மக்கள் இன்னும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தனக்கு சீனாவுடன் நல்லுறவு இருந்தாலும், இப்போதைக்கு அந்நாட்டு அதிபருடன் பேசும் மனநிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.