பெங்களூரு: கொரோனா காலக்கட்டத்தில் தொடர்புகளைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும், செயலிகள்(ஆரோக்யா சேது போன்றவை), அரசின் அதிகாரத்தை அதிகரிக்கும் தன்மையுடையவை என்றும், இயல்புநிலை திரும்பியதும் அவற்றின் பயன்பாடு திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் இன்‍ஃபோசிஸ் நிறுவன தலைவர் நந்தன் நீல்கனி.

அவர் கூறியுள்ளதாவது; கொரோனா பரவல் என்பது உண்மையிலேயே கற்பனைக் கெட்டாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நான் சந்திக்கும் மனிதர்களின் உடல்நிலை குறித்து நான் தெரிந்துகொள்ள வேண்டும்.

‍ஆரோக்கியம் என்பது தனியுரிமை தொடர்பானது. இது தனியுரிமை மற்றும் கண்காணிப்பில் ஒரு புதிய கோணத்தை முன்வைக்கிறது. முறையான கட்டுப்பாட்டிற்கு, யார் எங்கிருந்து வருகிறார்கள் மற்றும் அவர்கள் தனிமைப்படுத்தலைப் பின்பற்றுகிறார்களா? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், இது அரசின் அதிகாரத்தை இன்னும் அதிகரிக்கும் ஒரு அபாயத்திற்கு இட்டுச் செல்கிறது. எனவே, அவற்றிலிருந்து நாம் பாதுகாப்பு பெறுவதுடன், தற்போதைய நடவடிக்கைகளை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கையாள்வதோடு, அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், இந்த செயலிப் பயன்பாட்டைத் திரும்பப்பெற வேண்டும்” என்றார்.