மூன்று கன்டெய்னர் லாரிகளின் கறையான்கள்: அப்பணசாமி

குற்றம் கடிதல்: 6

மே 14, 2016. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு என்ற நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற இடத்தில் சுற்றிக் கொண்டிருந்த மூன்று கண்டெய்னர் லாரிகளில், கணக்கில் வராத பணம் ரூ. 570 கோடியைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அது மட்டுமலாமல் அதே தினத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்குக்குப் பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.6 கோடி  பறிமுதல் செய்யப்பட்டதால் இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் மே 23 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் வரலாற்றில் வாக்குக்குப் பணம் வினியோகிப்பதாகக் கூறி இரண்டு தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது என்பதும் இதுவே முதல் முறை

hqdefault

இதற்கும் ஒருநாள் முன்னதாக, அதாவது மே 13 அன்று, இதுவரை ரூ.100 கோடி கணக்கில் வராத பணம் ரொக்கமாகப் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும் இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் கணக்கில் வராத இவ்வளவு பணம் ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்படுவதும் இதுவே முதல் முறை என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களில் மேலும் ரூ.4 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. மே 14 அன்று பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 576 கோடியையும் சேர்த்தால் ஆக மொத்தம் ரூ.680 கோடி பறிமுதல் ஆகி, நமது மாநிலம் முறியடிக்க முடியாத சாதனையைப் படைத்தது.

இவை தவிர, கம்மல்களாக, மூக்குத்திகளாக, கொலுசுகளாக, அண்ணன் சீராகப் பணம் விளையாடுவதாகவும் பரவலான புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இதில் என்ன விஷேசமென்றால், ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் பண வினியோகம் நடந்தது. சென்னையில் முன்னாள் தி.மு.க அமைச்சரும் மதுபான ஆலை உரிமையாளருமான ஒருவருடைய அலுவலகத்தில் ரூ. 3.58 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் தி.மு.க வேட்பாளரிடமிருந்து ரூ 2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக அ.தி.மு.க அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நண்பரான வியாபாரி ஒருவரிடமிருந்து கத்தை கத்தையாக ரூ. 4.87 கோடி பறிமுதல் செய்யப் பட்டிருந்தது. இப்படி ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பணத்தை வாரி இறைக்க முயன்றுள்ளனர்.

அந்த ட்ரக்குகள்
அந்த ட்ரக்குகள்

இப்படியான உச்சக்கட்ட நேரத்தில்தான்  வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பிடிபட்டது. இது ஸ்டேட் பாங்க் பணம் என்றும் கோவையில் இருந்து விசாகப்பட்டணம் வங்கிக் கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றும் மத்திய நிதி அமைச்சரே கூறினார். ஆனால் அதற்கான ஒரு ஆவணமும் வெளியிடப் படவில்லை. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கியும் இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக நீலகிரி எஸ்டேட்டில்  இருந்து 8 கன்டெய்னர்களில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அவற்றில் மூன்று கன்டெய்னர்கள்தான் இவை என்றும் எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் கூறின.

இதற்குச் சில நாட்கள் முன்பு சிறுதாவூர் பங்களாவில் கன்டெய்னர்களில் பணம் வந்து இறங்குகிறது என்று கூறப்பட்டதும் நினைவிருக்கலாம். இதாவது பரவாயில்லை, இதற்கும் ஒரு மாதம் முன்பே, பணம் கப்பல்களில் சுற்றிக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் சுற்றின. இதையெல்லாம் வாசிக்கும் போது ஏதோ ஆங்கிலப் படங்களைப் பார்த்து விட்டுக் கற்பனையாக வைரல் பரப்புகிறார்கள் என்று எண்ணத் தோன்றியது. ஆனால் கன்டெய்னர்களில் உண்மை கமுக்கமாகச் சிரித்தது.

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

ரூ. 570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் எம்.பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் பல கேள்விகளை எழுப்பி அவை குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த வாரம் சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், திருப்பூரில் கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடி பணம் ஸ்டேட் வங்கியின் உள்ளக வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் சர்வதேசத் தலையீடு எதுவும் கிடையாது. சி.பி.ஐ விசாரிக்கும் அளவுக்கு இந்த வழக்கு ஒன்றும் பெரிய குற்றம் தொடர்பானதோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மீதானதோ , அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடிய வழக்கோ அல்ல. சி.பி.ஐ-யில் தற்போது குறைவான எண்ணிக்கையில்தான் அதிகாரிகளும் உள்ளனர். அப்படியிருந்தும் இண்டர்போலுடன் இணைந்து பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறோம். எனவே இதில் சி.பி.ஐ தனியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தனர்.

சென்னை ஹை கோர்ட்
சென்னை ஹை கோர்ட்

ஆனால் இந்தப் பதிலை நிராகரித்த  சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை சி.பி.ஐ. தான்  விசாரிக்க வேண்டுமென்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இப்போது சி.பி.ஐ அடுத்து என்ன செய்யப் போகிறது? தம்மைப் பொறுத்தவரை இந்த வழக்கு அவ்வளவு முக்கியம் இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டது. மேலும், அதிமுக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறோம். அதற்கே போதிய ஊழியர் பலம் இல்லை என்றும் கூறியுள்ளது. இதையே காரணம் காட்டி சி.பி.ஐ இந்த வழக்கை இழுத்தடிப்பதற்கான முகாந்திரங்கள் காணப்படுவதாகச் சட்ட நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் அதற்கும் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடலாம். அல்லது தனது மேற்பார்வையில் வழக்கினைக் கொண்டு வந்து விசாரணையை முடுக்கிவிடும் சூழ்நிலை உருவாகலாம் என்கிறார்கள்.

அடுத்ததாக, ஏன் இந்த ஒரு பிரச்சினை பற்றி மட்டும் விசாரிக்க வேண்டும் என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் பணம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனபதை விசாரிப்பது அவசியம் இல்லையா? அதனை ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பின் கீழ் தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தினால்தான் தேர்தல் முறையைப் பணம் எந்த அளவுக்கு செல்லரித்துள்ளது என்ற உண்மை நிலவரம் தெரிய வரும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

Leave a Reply

Your email address will not be published.