சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் அதிக கொரோனா தொற்றுகள் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் 70 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும். சில நாட்களுக்கு முன் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக இருந்தது. ஆனால், மீண்டும் உயர்ந்து 13,000ஐ கடந்துவிட்டது.

ஆகையால், தற்போது சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி மொத்தம் 70 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட  பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 பகுதிகளும், தண்டையார்பேட்டையில் 11 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.