சென்னை,

பால் கலப்படம் குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நீதி விசாரணை வேண்டும் என்று பால் முகவர் மற்றும் தொழிலாளர் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பால் முகவர் மற்றும் தொழிலாளர் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

“நேற்று (01.06.2017) இரவு 10.00மணிக்கு “தந்தி” தொலைக்காட்சியின் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சி “யில் நெறியாளர் திரு. ரங்கராஜ பாண்டேவின் கேள்விகளுக்கும்,

கடந்த 30.05.2017 அன்று பிற்பகல் 2.00மணிக்கு “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியின் “வெல்லும் சொல்” நிகழ்ச்சியில் நெறியாளர் திரு. கண்ணன் அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்த “தமிழக பால்வளத்துறை அமைச்சர்” திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள்

“ஆவின் நிறுவனத்தில் மொத்த விநியோகஸ்தர்கள் முறையே இல்லை” எனவும், தனியார் பால் நிறுவனங்களில் தான் மொத்த விநியோகஸ்தர் முறை பின்பற்றப்படுவதாகவும் ஒரு தவறான தகவலை தெரிவித்து முழுப் பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி நிறைய உண்மைக்குப் புறம்பான தகவல்களை அந்நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.

ஏனெனில் கடந்த 2010ம் ஆண்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு எங்களது சங்கத்தின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு பெறப்பட்ட தகவலில் 2000ம் ஆண்டு முதலே மொத்த விநியோகஸ்தர்கள் முறை இருப்பதற்கான ஆதாரங்கள் வாயிலாக 32மொத்த விநியோகஸ்தர்கள் சென்னையில் இருப்பதாகவும்,

அதன் பிறகு 2014ம் ஆண்டு கேட்டு பெறப்பட்ட தகவலில் 35மொத்த விநியோகஸ்தர்கள் சென்னையில் இருப்பதாகவும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின் நிர்வாகத்தால்) சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 02.06.2016அன்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கும், 17ஒன்றியங்களுக்கும் எங்களது சங்கத்தின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கேட்டு பெறப்பட்ட தகவலில் சென்னையில் மொத்த விநியோகஸ்தர்கள் முறை தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டு வருவதோடு,

திருச்சி ஒன்றியத்தில் (2006முதல்) 9பேர்களும், கோவை ஒன்றியத்தில் 3 பேர்களும், நெல்லை ஒன்றியத்தில் 3 பேர்களும், தஞ்சை ஒன்றியத்தில் (2004முதல்) 4 பேர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 4 பேர்களும், தர்மபுரி ஒன்றியத்தில் ஒருவரும், வேலூர் ஒன்றியத்தில் 9பேர்களும், விழுப்புரம் ஒன்றியத்தில் 6பேர்களும் மொத்த விநியோகஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக எங்களது சங்கத்தின் கேள்விகளுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட ஆவின் ஒன்றிய நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலவரம் இப்படியிருக்க தனியார் பால் நிறுவனங்கள் மட்டும் தான் மொத்த விநியோகஸ்தர்கள் முறையை அமுல்படுத்தி வருவதாகவும், ஆவின் நிறுவனத்தில் இம்முறை அமுலில் இல்லை என்றும் பேசியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் எனும் முறையில் கடந்த 25.05.2017ம் தேதி இரவு 8.00மணிக்கு “புதிய தலைமுறை” தொலைக்காட்சியின் “நேர்படப் பேசு” நிகழ்ச்சியிலும், இரவு 9.00 மணிக்கு “தந்தி” தொலைக்காட்சியின் “ஆயுத எழுத்து மீட்சி” நிகழ்ச்சியிலும், மற்றும் 27.05.2017ம் தேதி இரவு9.00மணிக்கு “புதிய தலைமுறை” தொலைக்காட்சியின் “நேர்படப் பேசு” நிகழ்ச்சியிலும் நேரலையில் பங்கேற்ற நான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்தும்,

பொதுமக்களை பால் கலப்படம் தொடர்பான அச்சத்தில் இருந்தும், பீதியில் இருந்தும் மீட்கின்ற வகையிலும் பேசிய காரணத்தால் எனது நடவடிக்கைகளையும், எங்களது சங்கத்தின் நடவடிக்கைகளையும் முடக்கும் நோக்கில் ஆவின் உயரதிகாரிகளான தமிழ்ச்செல்வன் மற்றும் புகழேந்தி, அமைச்சர் உதவியாளர் ஒருவர் என மூவர் தனியார் பால் நிறுவனங்களையும், ஆவின் மொத்த விநியோகஸ்தர்களையும் தொலைபேசியில் மிரட்டிய காரணத்தால்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை  (28.05.2017) முதல் காலை முதல் தனியார் பால் நிறுவனமும், ஆவின் மொத்த விநியோகஸ்தரும் தங்களின் பால் விநியோகத்தை நிறுத்தி விட்டனர்.

மேலும் தற்போது நேற்று (01.06.2017) தனியார் பால் நிறுவனம் எனக்கு பால் விநியோகத்தை தொடங்கி விட்ட நிலையில் ஆவின் மொத்த விநியோகஸ்தர் மட்டும் ஆவின் அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து பால் விநியோகம் செய்யவில்லை.

ஆனால் இந்த சூழ்நிலையில் கடந்த 30.05.2017அன்று பிற்பகல் 2.00மணிக்கு “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியின் “வெல்லும் சொல்” நிகழ்ச்சியில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் எனக்கு ஆவின் நிறுவனம் மட்டுமே பால் விநியோகம் செய்வதாகவும்,

தனியார் பால் நிறுவனம் பால் விநியோகம் செய்யவில்லை என உண்மைக்குப் புறம்பான தகவலை பேசியிருக்கிறார். பொறுப்புமிக்க பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் இப்படி உண்மைக்குப் புறம்பான வகையில் பேசியிருப்பதை வைத்து பார்க்கும் போது  ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு பேசியிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

மேலும் துறை சார்ந்த அமைச்சர் ஊடகங்களில் பேசும் போது உண்மை நிலவரத்தை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு பேசாமல் ஏதோ அரசியல்கட்சி மேடையில் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் பேசுவதைப் போன்று பேசியிருப்பது எங்களது துறை சார்ந்த அமைச்சர் எதுவுமே தெரியாமல் பேசுவது எங்களுக்கெல்லாம் வேதனையாகவும், கவலையாகவும் இருக்கிறது.

மேலும் தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் அவர்கள் தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகள் புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக ஆணித்தரமாக தெரிவித்து வந்தார்.

தற்போது அந்த மாதிரி பாலின் மாதிரிகள் தமிழகத்தில் இருந்து எங்களுக்கு வரவில்லை என அந்த ஆய்வகத்தின் இயக்குனர் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் அங்கே பாலின் மாதிரிகளை ஆய்விற்கு வாங்க மறுத்ததாக தெரிவித்தது மட்டுமின்றி அரசு அதிகாரிகள் மீதும்,  தனியார் பால் நிறுவனங்கள் மீதும் பழியை போட்டு தான் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.

இப்படி முன்னுக்குப்பின் முரணாக பால்வளத்துறை அமைச்சர் பேசி வருவதில் இருந்து அவர் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மீது சுமத்தி, பொதுமக்களி டையே தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதும் தெள்ளத்தெளி வாக தெரிகிறது.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு  தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் தொடர்பான பால்வளத்துறை அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாகவும், பாலில் கலப்படம் தடுப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை கள் குறித்தும்,

தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தையும், பீதியையும் போக்கிடும் வண்ணம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், அவற்றை பொதுமக்கள் மத்தியில் தெளிவுபடுத்திட வேண்டும் எனவும் “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் தங்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்”

இவ்வாறு சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.