பிரசாந்த் பூஷனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு விமர்சனத்தை நசுக்குகிறது: முன்னாள் நீதிபதிகள் கருத்து

டெல்லி: பிரசாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விமர்சனத்தை நசுக்குகிறது என்று முன்னாள் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 27,29 ஆகிய நாட்களில், பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் ஒரு சில கருத்துகளை கூறியிருந்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தற்போது உருவெடுத்துள்ளது. ட்விட்டர் பதிவில் உச்ச நீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதிகள், தற்போதைய தலைமை நீதிபதி செயல்பாடுகள் வரை பலர் குறித்தும் அவர் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து பிரசாந்த் பூஷனின் ட்விட்டர் பதிவுகள் இந்தியாவின் நீதித்துறையை களங்கப்படுத்திவிட்டதாக உச்சநீதிமன்ற  நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.இந் நிலையில், பிரசாந்த பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விமர்சனத்தை நசுக்குகிறது என்று முன்னாள் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர்,  டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏபி. ஷா உள்ளிட்ட  131 இந்திய குடிமக்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

சமீப காலமாக உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட சில கவலைகளை தான்  பூஷண் வெளிப்படுத்தினார். நீதியின் நலனுக்கும், உச்சநீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் நீதிமன்ற அவமதிப்பு  வழக்கை கைவிட வேண்டும். பழிவாங்கல், குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை போன்ற அச்சமின்றி ஒரு நாட்டின் உச்சநீதிமன்றம் பொது விவாதத்தை முன்னெடுத்து செல்லும் சுதந்திர அமைப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.