சென்னை:,

மிழகம், புதுச்சேரியில் பிரபல கோல்டுவின்னர் சமையல் எண்ணை நிறுவனமான  காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

காளிமார்க் குளிர்பான நிறுவனங்கள் நடத்தி வரும் காளீஸ்வரி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யவில்லை என்று ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. இந்த  சோதனையில் சுமார் 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காளீஸ்வரி நிறுவனம், சமையல் எண்ணை மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு நிறுவனம். காளிமார்க் குளிர்பான நிறுவனங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபகாலமாக பெப்சி, கோக்கை புறக்கணித்து விட்டு தமிழக நிறுவனமான காளிமார்க் நிறுவன பானங்களை பருகுமாறு சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பிரசாரம் செய்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

அதைத்தொடர்ந்து பெப்சி கோக் நிறுவன தலைவர் டில்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் கோக், பெப்சி விற்க ஏற்பாடு செய்ய முறையிட்டனர்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வருமானவரி சோதனை தமிழகத்தில் உள்ள, குறிப்பாக பவண்டோ குளிர்பான நிறுவனத்தை குறிவைத்தே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஜெ.மறைவுக்கு பிறகு மத்திய பாரதியஜனதா அரசு தமிழக அரசியலில் புகுந்து குட்டையை குழப்பி வருகிறது. அதன் காரணமாக தலைமை செயலாளர் வீட்டில் ரெய்டு, பின்னர் அதிமுக உடைப்பு, தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு, அதிமுக தலைமையை மிரட்டும் நோக்கில் டிடிவி தினகரனின் வழக்குகள் விறுவிறுப்பு  என்று தொடர்ந்து தமிழகத்தை குறிவைத்தே தாக்கி வருகின்றது.

மேலும், தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையான விவசாயகிள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, நீட் பிரச்சினை, இந்தி திணிப்பு,  மருத்துவ மாணவர்களின் இடஒதுக்கீடு பிரச்சினை  போன்ற எந்தவொரு தமிழக பிரச்சினைகளுக்கும் செவி சாய்க்காமல், முதுகெலும்பற்ற தமிழக அரசின் கையாலாகதனத்தால் பாரதியஜனதா அரசு மறைமுகமாக தமிழகத்துக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக கலங்கிய குட்டையில் மீன்களை வேட்டையாடுவதுபோல தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக நேற்று முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு. அதைத் தொடர்ந்து இன்று தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற குளிர்பான நிறுவனத்தை மிரட்டும் வகையில் காளீஸ்வரி நிறுவனங்களில் சோதனை என்ற பெயரில் தனது அதிகார பலத்தால் மிரட்டி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டு காரணமாக இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது தற்போது உறுதியாகி உள்ளது,

தமிழகத்தை மிரட்டவே  மத்திய அரசு வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை  என்ற பெயரில்,  தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவருவது வெட்டவெளிச்சமாகிறது.