உச்சநீதிமன்றம் – மத்திய அரசு இடையே தொடரும் மோதல்: கொலீஜியம் பரிந்துரையை மீண்டும் திருப்பி அனுப்பிய மத்திய அரசு

டில்லி:

டில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமன விவகாரத்தில் கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளது. ஏற்கனவே  உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம்  பரிந்துரை செய்திருந்ததை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக உச்சநீதி மன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் விசுவரூபம் எடுத்து வருகிறது.

டில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு கொல்கத்தாவை சேர்ந்த நீதிபதி அனிருத்தா போசின் பெயரை கொலீஜியம் பரிந்துரை செய்த நிலையில் அதனை ஏற்க மறுத்து மத்திய அரசு மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது.

டில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி மிகவும் முக்கியமானது என்பதால் திருப்பி அனுப்புவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வேறு உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அனிருத்தாவை நியமிப்பதில் ஆட்சேபம் இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக டில்லி உயர்நீதி மன்றத்தில் தலைமைநீதி பதவி நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்சநீதி மன்ற நீதிபதிகள் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு மறுத்து உள்ளது.

ஏற்கனவே  உச்சநீதிமன்ற நீதிபதியாக உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பின் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில் அதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியதால் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையிலான பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் மத்திய அரசு மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக கூறியிருந்தார்.

ஆனால், மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியோ, உச்சநீதி மன்ற கொலிஜியம் பரிந்துரையை திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று பதில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்திலும் மத்திய அரசு தனது அதிகாரப்போக்கை மீண்டும் காட்டி உள்ளது.

இதன் காரணமாக உச்சநீதி மன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

You may have missed