Random image

தொடர் உடல் நலக்குறைவு: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பதவி விலக முடிவு

பனாஜி:

தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும்  கோவா முதல்வர்  மனோகர் பரிக்கர், பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பாஜ தலைமைக்கு தகவல் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

முன்னாள் மத்திய அமைச்சரான மனோகர் பாரிக்கர், கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மாநில முதலமைச்சராக உளளார். தற்போது 62 வயதாகும் பாரிக்கருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோதனையில் அவருக்கு கணைய அழற்சி  நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அதையடுத்து  மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர்  கடந்த ஜூன் மாதம் 14ந்தேதி கோவா திரும்பி மீண்டும் பதவியில் தொடர்ந்தார்.

தற்போது மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது  மும்பை, கோவா மருத்துவ மனைகளில்  தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழ்நிலையில், தான் முதல்வர் பதவியில் தொடர்வது சரியல்ல என்று  பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கோவா மாநில முதல்வராக யாரை நியமனம் செய்யலாம் என்பது குறித்து  பாரதிய ஜனதா கட்சி யின் தேசியத் தலைவரான அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இப்போதைக்கு பதவியில் தொடரும்படி மனோகர் பாரிக்கருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.