கொழும்பு:

ண்டி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வரும் மத கலவரத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் 10 நாட்கள்  அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து செல்வோன் சேவைகளையும் நிறுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அரசு தோல்வி அடைந்த நிலையில், அங்கு அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  கண்டி பகுதியில் இஸ்லாமியர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அதைத்தொடர்ந்து நடபெற்ற வன்முறைச் சம்பவத்தின்போது  தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து கண்டி பகுதியில் வன்முறை பரவியது. இதில், 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 100 க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.  பல இடங்களில் சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த கலவரத்தை முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் ஆதரவளர்கள் தூண்டி விடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நேற்று முதல் கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில்  ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

மத கலவரம் நாடு முழுவதும் பரவாமல் தடுக்கும் வகையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனத்தை இலங்கை அரசு நேற்று பிறப்பித்தது.

இந்நிலையில், கலவரம் குறித்த தகவல்கள் மொபைல் போன், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பரவுவதால், அதை தடுக்கும் பொருட்டு கண்டியில் செல்போன்கள் சேவையை  முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது.