105வது நாள்: லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் பாராளுமன்றம் வருவோம் என விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 105வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் பாராளுமன்றம் வருவோம் என மத்தியஅரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். வட மாநில விவசாயிகள், டெல்லி எல்லையில் 100 நாட்களை கடந்தும் போராடி வருகின்றனர். நேற்று சர்வதெச பெண்கள் தினத்தை முன்னிட்டு, முற்றிலும் பெண்கள் கலந்துகொண்ட மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாய்த், வரும் 13ந்தேதி கொல்கத்தாவில் , நாங்கள் விவசாயிகளுடன் பேசவும் அங்கு செல்வோம், பிரமாண்ட பேரணி நடத்தப்போவதாகவும் கூறியவர், தேவைப்பட்டால் லட்சகணக்கான டிராக்டர்களுடன் பாராளுமன்றம் வருவோம் என்றும் கூறினார்.

ஏற்கனவே குடியரசு தின விழாவின் போது 3,500 டிராக்டர்களுடன் டெல்லி வந்தோம். இதில் எதுவுமே  வாடகை டிராக்டர்கள் இல்லை”, எங்களுக்கு சொந்தமானதே என்றவர்,  விவசாயத்துறை  அமைச்சர்  அதிகாரமற்றவர், சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க முடியாதவர்” என்று மத்திய அமைச்சர்  நரேந்திர சிங் தோமரின் பெயரை குறிப்பிடாமல்கடுமையாக விமர்சித்தார்.