ஓயாத புகழாரம்.. கடுப்பான காமராஜர்.. ஒரு சின்ன பிளாஷ்பேக்..

’துக்ளக்’ பத்திரிகையின் பொன்விழா மலரில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து, அதன்( முன்னாள்) ஆசிரியர் சோ 1.1.1976 ல் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில் இருந்து..
‘’காமராஜர் பற்றி ஒரு முக்கியமான நிகழ்ச்சியை விவரிப்பதற்கு முன்னால் , வேறு ஒரு சிறிய நிகழ்ச்சியை விவரிக்கிறேன்.

திருவான்மியூர் அருகில் காந்தி சிலை திறப்பு விழா ஒன்று நடந்தது. காமராஜர் தலைமை வகித்தார்.பல கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

எந்த கட்சியிலும் சேராத நானும் அக்கூட்டத்தில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். கூட்டம் ஆரம்பித்தது. வானம் மூடிக்கொண்டிருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் திடீர் என்று மழை ஆரம்பிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

முதலில் வரவேற்புரை நிகழ்த்தியவர்களில் ஒருவர், காமராஜரை பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்தார். அடுக்கு மொழி, அலங்கார நடை,காமராஜரின் சாதனைகள் , அவருடைய திறமை,அவர் அனுபவித்த சிறை வாசங்கள், அவருடைய நாணயம்- எல்லாவற்றையும் பற்றி அந்த பேச்சாளர் விரிவாக பேச ஆரம்பித்தார்.

காமராஜரின் அருகில் நான் அமர்ந்திருந்தேன். காமராஜர் பற்றி அந்த நபர் பேசப்பேச, இவருடைய முகத்தில் கடுகடுப்பு தோன்றி அதிகமாகிக்கொண்டே வந்தது.

‘’மழை வந்து விடும் போல இருக்குது. ஜனங்களெல்லாம் மழையிலே மாட்டிக்குவாங்க.. இவரு என்ன என்னைப்பத்தி சும்மா பேசிக்கிட்டே இருக்காரு?’’ என்று என்னிடம் கேட்டார்.

சில நிமிடங்கள் கழிந்தன. காமராஜரை பற்றி அந்த நபரின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. காமராஜர் மீண்டும் என்னிடம் மெதுவாக கூறினார். ’’இது என்ன இது? இன்னிக்கு காந்தியை பத்தி பேச வந்திருக்காங்களா? இல்லே என்னை பத்தி பேச வந்திருக்காங்களா?இது நல்லா இல்லையான்னேன்?’’ – அவர் பொறுமையை இழந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

அந்த பேச்சாளருக்கு அதை உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லை.மேலும் காமராஜரை பற்றியே பேசிக்கொண்டி ருந்தார். காமராஜர் என்னிடம் ஏதாவது சொல்லுவார் என எதிர் பார்த்து நான் உட்கார்ந்திருந்தேன்.காமராஜர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை.

தன்னுடைய நாற்காலியை விட்டு எழுந்தார்.பேசிக்கொண்டிருந்தவரை பார்த்து ,’’கொஞ்சம் நிறுத்துங்க’’ என்றார். மைக்கை விட்டு அவரை விலக்கினார்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க காமராஜர் மைக்கை பிடித்துக்கொண்டு பேசினார். ’’இவருக்கு என்னை பத்தி ரொம்ப நல்ல அபிப்ராயம். நான் ரொம்ப சாதனை எல்லாம் செய்து புட்டவன். பெரிய தியாகி. அதை எல்லாரும் புரிஞ்சுக்கிட்டீங்க இல்லே? இது போதும்னேன். இனிமே காந்தியை பத்தி பேசுவோம்.என்னை பத்தி பேசவா இங்கே கூட்டம் போட்டிருக்கீங்க? என்று கேட்டு அந்த நபரை உட்காரச்செய்து விட்டார்.

ஒரு மக்கள் கூட்டத்திடையே தன்னை பத்தி வேறு ஒருவர் புகழ் பாடுவதை எந்த அரசியல் வாதியாவது தடுத்து நிறுத்துவாரா? தன் புகழ் பாட எத்தனை பேர் கிடைத்தாலும் அதனை ரொம்பவும் அடக்கமாகவும், ரொம்பவும் பணிவுடனும் கேட்டுக்கொண்டு அந்த புகழுரைகளை வாங்கி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மனமகிழ்ந்து கொள்ளும் அரசியல் வாதிகளைத்தானே நம்மால் பார்க்க முடிகிறது.

அப்படிப்பட்டவர்களிடையே காமராஜர் என்ற அரசியல்வாதியின் -இந்த மாதிரி ஒருவர் தன் புகழ் பாடுவதை கேட்க சகிக்காத – மனப்போக்கு எனக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது.

விளம்பரத்தை துரத்திக்கொண்டு அலையும் அரசியல் வாதிகளிடையே, விளம்பரமே தன்னைத்தேடி வந்த போதும் அதைத்துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாக காமராஜர் வாழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறு உதாரணம்.

-ஏழுமலை வெங்கடேசன்