தொடர்கிறது: புதிய தலைமுறைக்கு அரசு கேபிளில் தடை

சென்னை:

டந்த வியாழக்கிழமை முதல் பல மாவட்டங்களில் அரசு கேபிளில் தடை செய்யப்பட்ட  புதிய தலைமுறை தொலைக்காட்சி சேவை இப்போதும் சில மாவட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி கடந்த வியாழக்கிழமை ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் மன ஓட்டம் குறித்து  “ஆர்.கே. நகரின் நாடிக்கணிப்பு “ என்ற கருத்துக்கணிப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

இதில் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு பன்னீர்செல்வம் என, 45.32% பேர் தெரிவித்திருந்தனர். தீபா என 17.35% பேரும், சசிகலா என, 4.72%பேரும் பிறர் என, 6.99% பேர் கருத்து கூறியிருந்தனர்.

மேலும், ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரணை ஆணையம் அமைப்பது அவசியம் என்று 70 சதவிகதம் பேரும், சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டது மக்களுக்கு எதிரானது என்று 65  சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த போதே தூத்துக்குடி, திருவண்ணாமலை, மதுரை, நாகர்கோவில், காஞ்சிபுரம், விருதுநகர், பலமாவட்டங்களில் அரசு கேபிளில் புதியதலைமுறை தடை செய்யப்பட்டது.

“குறிப்பிட்ட இந்த கருத்துக்கணிப்பை தங்களுக்கு எதிரானதாக கருதிய தினகரன் தரப்பு, ஆளும்கட்சிக்கு நெருக்குதல் கொடுத்து அரசு கேபிளில் புதிய தலைமுறையை தடை செய்துவிட்டது” என்று புகார் எழுந்தது.

சமூக ஆர்வலர்களும், செய்தியாளர்களும், “ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல் இது” என்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலு, அரசு கேபிளின்  இந்த நடவடிக்கையைக் கண்டித்து பலரும் பதிவிட்டனர்.

புதிய தலைமுறை  தலைமை நிர்வாக அதிகாரி ஷியாம்குமார், இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனர் குமரகுருபரனுக்கு, கடிதம் அனுப்பினார்.

இன்த நிலையில் பல மாவட்டங்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பு, அரசு கேபிளில் ஒளிபரப்பாகிறது. ஆனால் இன்னும் சில மாவட்டங்களில் தடை தொடர்கிறது.

தவிர, புதிய தலைமுறை ஒளிபரப்பாகும் மாவட்டங்களிலும் சேனல் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒளி, ஒலி தெளிவாக இல்லை.

கார்த்திகைச்செல்வன்

இது குறித்து புதியதலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வனை தொடர்புகொண்டு கேட்டபோது, “பெரும்பாலான மாவட்டங்களில் புதிய தலைமுறை தற்போது ஒளிபரப்பாகிறது. அதே நேரம் ஒளி, ஒளி தெளிவாக இல்லை என்பதும் உண்மைதான். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனரை மீண்டும் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவிக்க உள்ளோம்” என்றார்.

இந்த நிலையில், “ஆர்.கே. நகரின் நாடிக்கணிப்பு” என்ற அந்த நிகழ்ச்சியை புதிய தலைமுறை இன்று மறு ஒளிபரப்பு செய்தது.

சன் டிவியின் துணை நிறுவனமான எஸ்.சி.வி கேபிள் விஷன் கோலோச்சிய காலத்திலும், இது போல தங்களுக்கு “வேண்டாத” தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தடை செய்வதும், ஒளி ஒலி தரத்தைக் குறைப்பதும் நடைமுறையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.