சென்னை:

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், இந்த ஆண்டு அநாகரிகமான செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன.  எழுத்தாளர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதற்குகூட அனுமதிக்கப்படாத நிலை உருவாகி உள்ளது.. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்சியை ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்த நிலையில், மக்கள் கூட்டமும், புத்தக விற்பனையும்  வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்கள் செய்தி மையம் சார்பில், அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில்  மூத்த பத்திரிகையாளர் அன்பழகன், அரசு அதிகாரிகள் மீது உள்ள ஊழல் தொடர்பான புத்தகம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி), அவரது அரங்கத்தை காலி செய்ததுடன், அன்பழகன் மீதும் புகார் கூறியது. இதையடுத்து அன்பழகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பபாசியின் இந்த செயலுக்கு எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அங்கு தினசரி நடைபெறும் நிகழ்ச்சியில்  இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பேச அழைக்கப்படுவார்கள். தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் காரணமாக பல  எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள பலர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மதுரை எம்.பி.யான வெங்கடேசன் பபாசியின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து, கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், தற்போத, பழ.கருப்பையா மகன் மேடையில் பேசும்போது, அதை  நிறுத்தச் சொல்லி ஒரு கும்பல் தகராறு செய்தால், அவர்  மேடையை விட்டு இறங்கிச் சென்றார்.

பழ.கருப்பையாவின் மகன் சைவத் தமிழ் மெய்யியலாளர் கரு.ஆறுமுகத்தமிழன் என்பவர்,  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஒரு கும்பல் கோஷமிட்டது. இதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர், ”பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்.  ஆனால், அவர் தொடர்ந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக பேசிய நிலையில், ஒரு கட்டத்தில் அவரது கையிலிருந்த மைக் வாங்கப்பட்டது. இதனால் அங்கு  சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆறுமுகத்தமிழன் அரஙகிலிருந்து உடனடியாக வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு இரு தரப்பிலும் சலசலப்பு ஏற்பட்டது. அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆர்வலர்கள், பபாசியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இதற்கு பதில் தெரிவித்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள், சிலர் பேசுபவர்மீது கற்களை வீசுவோம் என்று மிரட்டியதால், பேச்சை நிறுத்தி அவரை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறி மழுப்பினர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருவது இலக்கிய வாதிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.