திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயர்ந்து வருகிறது.  ஏற்கனவே 3 அமைச்சர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மேலும் 2 அமைச்சர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், கேரளாவில் தொற்று பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரளாவில்தான். அதுபோல, விரைவான சிகிச்சை மூலம் குணமடைந்ததும் அங்குதான்.  தற்போது, கேரளாவில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,53,406 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலையில், 92,161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,60,253 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 907 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில்,  கேரளாவில் அமைச்சர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. , கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் டி. ஜெலீலுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. எம்.எம். மணி, திருவனந்தபுரம் மருத்துவமனையிலும், ஜெலீல் வீட்டிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

கேரளாவில் இதுவரை 5 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.