தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்… தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை தேடும் அதிகாரிகள்…

சென்னை: அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 2வது நாளாக நீடித்து வரும் நிலையில், பொதுமக்களின் சிரமத்தை போக்க, தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிக்கொடை, நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து இயக்கம் தடை பட்டுள்ளது. அதிமுக உள்பட சில கட்சிகளைச் சேர்ந்த ஒருசில டிரைவர்கள், கண்டக்டர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். அவர்களை மற்ற தொழிலாளர்கள் அச்சுறுத்தி பணி செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள்எழுந்துள்ளன.

இந்த நிலையில், ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச்சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்களைக் கொண்டு, போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து கழகங்கள் இறங்கியுள்ளன. மேலும்,  தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை தேர்வு செய்யும் பணி ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

சாலைப்பயிற்சி நிறுவனத்தில் படித்து முடித்த டிரைவர்கள் பட்டியல் பெறப்பட்டு அவர்களை பணிக்கு அழைக்கும் பணி நடந்து வருகிறது. இதுதவிர வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் பயிற்சி பெற்ற டிரைவர்கள் பட்டியல் பெறப்பட்டு, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சிரமத்தை போக்கும் வகையில் நாளை பெரும்பாலான பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.