தொடர் பனி: மொட்டிலேயே கருகும் மல்லிகைப் பூ! விவசாயிகள் வேதனை

சென்னை:

மிழகத்தில் கடந்த நாட்களாக தொடர் பனி பெய்து வருவதால் மல்லிகை பூக்கள் கருகி வருவதால், அதற்கு உரிய விலை கிடைக்காமல் பூ விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள் பெரும் வேதனைக்கு ஆளாகி வருகிறார்கள்.

தமிழகத்தில் மல்லிகைப்பூவுக்கு பெயர் பெற்றது மதுரை. அதையடுத்து   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கெஞ்சனூர், தாண்டாபாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ஆலத்து கோம்பை, பவானிசாகர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் சுமார் 25ஆயிரம் ஏக்கருக்கு மேலாக மல்லிகை பயிரிட்டு வருகின்றனர்.

இங்கு விளையும் மல்லிகை பூ தமிழ்நாட்டில் அனை‌த்து‌ப் பகுதிகளுக்கு‌ம் செல்வது மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் செல்கிறது.

தற்போது இந்த பகுதியில் கடந்தசில நாட்களாக தொடர்ந்து பனி பெய்து வருவதால், மல்லிகைப் பூக்கள் மொட்டாகவே கருவி விடுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த பகுதியில் இருந்து  நாள் ஒன்றுக்கு 5 டன் மல்லிகை பூ உற்பத்தியாகும் நிலையில் தற்போது பெரும்பாலான பூக்கள் கருவி விடுவதால் பாதி அளவுக்கு கூட பூக்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

பொதுவாக தீபாவளி முதல் மல்லிகைப்பூ விலை உயர்ந்தே காணப்படும். தொடர்ந்து திருமண முகூர்த்தங்கள் மற்றும்   திருவிழா காலங்களில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.500க்கும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது. இது பூ விவசாயிகளிம் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் பனியின் காரணமாக தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.