ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவன் ஹன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இருந்த 270 ஒப்பந்த பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் இல்லை. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருங்கால வைப்பு நிதி பலன்களை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் யுயு லலித், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

ஒரு நிறுவனத்தில் உள்ள பணியாளர்களை, ஒப்பந்த பணியாளர்கள், நிரந்தர பணியாளர்கள் என்று பாகுபடுத்தி பார்க்க முடியாது என்று அவர்கள் தீர்ப்பில் கூறி இருக்கின்றனர்.

இது குறித்து பேசிய முன்னாள் தொழிலாளர் நலத்துறை செயலாளர் சங்கர் அகர்வால், தொழிலாளர் சட்டங்கள் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இடையே பாகுபாடு காட்டாது மற்றும் தொழிலாளர்கள் மற்ற நிறுவனம் மூலம் ஈடுபடும்போது கூட, பி.எப் திட்டத்தின் கீழ் சலுகைகளை வழங்க முதலாளிகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றார்.

பவன் ஹன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தமுள்ள 840 ஊழியர்களில் 570 பேர் நிரந்தர பணியாளர்கள். 270 பேர் ஒப்பந்த பணியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.