செம்பரம்பாக்கம் நீர் வெளியேற்றப்படுவதால் அடையாறு கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல மாநகராட்சி அறிவுறுத்தல்…

சென்னை: நிவர் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால், இன்று மதியம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், அடையாறு கரையோர மக்கள், உடனடியாக சென்னை மாநகராட்சி அமைத்துள்ள  பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியில்,  நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால், ஏரியில் இருந்து உபரிநீரை திறந்து  பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று மதியம்  மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று நீர்திறப்பு குறித்து உதவி பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்துள்ளார்.

ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள  வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,சென்னை மாநகராட்சியும் அடையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் உடடினயாக அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தி  உள்ளது. குறிப்பாக  மண்டலம் 10,11, 12 மற்றும் 13-ல் வசிப்பவர்கள் சென்னையில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து பல இடங்களில் பெய்து வரும் கனமழையால் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.எனவே ஏரிகளை தீவிரமாக கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள்,  ஊழியர்கள், நிவார பணிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும்,  அரசின் செயலுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.