ஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு

மாட்ரிட் :

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’ என்று ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு கூறுவதாக லான்செட் எனும் பிரபல மருத்துவ இதழ் கூறுகிறது.

ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வின் முடிவு அந்நாட்டு மக்கள் தொகையில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி என்று அழைக்கப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கோவிட் -19 க்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கியுள்ளது என்றும் 95% மக்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மூலம், மக்கள் தொகையில் போதுமான அளவு மக்களுக்கு வைரஸ் அல்லது பாக்டீரியாவால் பாதிப்போ – அல்லது அந்நோய்க்கு எதிராக தடுப்பூசி போடும்போதோ, நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

“மக்கள் தொகையில் 60% பேருக்கு நோய் பரவல் ஏற்படும் போது தான் அது ஹெர்ட் இம்யூனிட்டி நிலையை அடையும் என்றும் நோய் பரவலின் தற்போதய நிலையில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி நிலையை அடைவதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும் சில வல்லுநர்கள் கூறுவதாக” ஸ்பெயின் தேசிய தொற்றுநோயியல் மையத்தின் இயக்குநரும் இந்த ஆய்வின் முன்னணி எழுத்தாளருமான மெரினா பொல்லன் சி.என்.என் செய்தியாளரிடம் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பண்ணிரெண்டிற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் குறித்த உடல் திரவ ஆராய்ச்சியில் தற்போது ஸ்பெயின் முழுவதும் 61,000 க்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததே மிகப்பெரிய ஆய்வாக கருதப்படுகிறது என்று ஐரோப்பிய நாடுகளின் நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் கூறியதாக மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2,766 பேருக்கு இதேபோன்று நோயெதிர்ப்பு சக்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் வெளியான லான்செட் மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல், ஏப்ரல் முதல் மே மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட சுவிஸ் ஆய்வில் ஜெனீவாவின் பாதிப்பு 10.8% என்று லான்செட் தெரிவித்துள்ளது.

சீனாவிலும் அமெரிக்காவிலும் இதேபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், இங்குள்ள பெரும்பான்மையான மக்கள், நோய் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளிலும் கூட கொரோனா வைரஸ் நோய்க்கு பரிச்சயமாகவில்லை என்று அந்த மருத்துவ இதழ் கூறியிருக்கிறது.

“இயற்கை நோய்த்தொற்றின் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான எந்தவொரு அணுகுமுறையும் நெறிமுறையற்றது மட்டுமல்லாமல் அது சாத்தியமில்லாததும் கூட” என்று இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் தெரியவருவதாக, புதிய வைரஸ் நோய்களுக்கான ஜெனீவா மையத்தின் தலைவர், இசபெல்லா எக்கர்லே மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் வைராலஜிஸ்ட், பெஞ்சமின் மேயர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், ஒருவருக்கு கொரோனா வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதற்காக அவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படாது என்றும் இந்த நோயெதிர்ப்பு சக்தி எத்தனை நாட்கள் அவரை வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் என்றும் மருத்துவர்களால் உறுதியாக கூறமுடியவில்லை.

கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும், இங்கு 2,50,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 28,000 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் தொற்றுநோயியல் நிறுவனங்கள் மற்றும் அரசு ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ஏப்ரல் மாதம் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் ஏப்ரல் 27 முதல் மே 11 வரை நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வின் முடிவுகளை லான்செட் வெளியிட்டது, இது நாடு தழுவிய ஆன்டிபாடி பாதிப்பு 5% என்பதைக் காட்டுகிறது.

ஆனால் கோவிட் -19 நாட்டில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாட்ரிட் பெருநகரப் பகுதி 10% க்கும் அதிகமான பாதிப்பைக் கொண்டிருந்தது, மேலும் அடர்த்தியான நகர்ப்புற பகுதியான பார்சிலோனாவில் 7% இருந்தது, அதே நேரத்தில் பல கடலோர மாகாணங்களும் மிகக் குறைந்த விகிதங்களைக் கொண்டிருந்தன.

ஸ்பெயினின் இரண்டாவது ஆய்வு கட்ட முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டன, இது 5.2% தேசிய பரவலைக் காட்டுகிறது, இது முதல் கட்டத்தை விட சற்று அதிகமாகும். மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தின் முடிவுகள் திங்களன்று அறிவிக்கப்பட்டது; தேசிய பாதிப்பு 5.2% ஆக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

“மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் தொற்றுநோயால் இதுவரை பாதிக்கப்படாத நிலையில், தடைகள் தளர்த்தப்படும் போது தொற்று நோய் அதிகரித்து இரண்டாவது அலை ஆரம்பிக்கக்கூடும்” என்று லான்செட் மருத்துவ இதழின் ஆசிரியர்கள் எக்கெர்லே மற்றும் மேயர் ஆய்வுகளை மேற்கோள்காட்டி கூறியிருக்கின்றனர்.

கார்ட்டூன் கேலரி