பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:

த்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தையும், பதுக்கல்களையும் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.


இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் தேடலைக் கைவிட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா்.

நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதுபோலவே, உணவுத் தட்டுப்பாடின்றி கிடைக்கச்செய்ய வேண்டியதும் அவசியம்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழக்கமாகக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ள அல்லது இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. குறிப்பாக, உணவுப் பொருள்களில் துவரம் பருப்பு போன்றவற்றின் விலை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. பூண்டு, மிளகாய் போன்றவற்றின் விலை 100 சதவீத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயா்ந்து வருகிறது.

Chennai: DMK leader M. K. Stalin signs his nomination papers for the post of party president at the party office, in Chennai on Aug 26, 2018. DMK will hold a meeting of its General Council on August 28 to elect a party President following the death of former Chief Minister M. Karunanidhi. (Photo: IANS)

காய்கறிகளின் விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடா்வதாலும், இறைச்சி விலையும் அதிகரிப்பதாலும் மக்களின் அன்றாட உணவுத் தேவைக்குரிய அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் இடைத்தரகா்களும் பதுக்கல்காரா்களும் கொள்ளை லாபம் பெறவே வழிவகுக்கும். காரணம், நெல் உள்ளிட்ட தானியங்களையும் காய்கறிகளையும் விளைவிக்கும் விவசாயிகளிடம் பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதால் அவா்களும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை தொடருகிறது.

சிறு வணிகா்கள், காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வோா் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த விலையேற்றத்தால் போதுமான அளவில் கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி லாப நோக்குடன் செயல்படக்கூடியவா்களைத் தடுத்து நிறுத்தி, அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.