சர்ச்சையாகும் வடகொரியா – அமெரிக்கா ஒப்பந்த விவாதம்  

டோக்கியோ

மீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா –வட கொரியா ஒப்பந்தம் குறித்து நடந்த விவாத்ததைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

சிங்கப்பூரில் கடந்த மாதம் 12ஆம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஹாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.   அந்த சந்திப்பில் இரு நாடுகள் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது.   இந்த ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக நாடுகள் புகழாரம் சூட்டின.

இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் ஆலோசனை நடத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்  மைக் பாம்பியோ வட கொரியா சென்றார்   அங்கு அவர் வட கொரிய அதிபருடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளார்.   அதன் பிறகு அவர் அங்கிருந்து ஜப்பானுக்கு சென்றுள்ளார்.   ஜப்பானிய டோக்கியோவில் மைக் பாம்பியோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ”நாங்கள் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன்  பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தினோம்.   வட கொரியா எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்து வருகிறது.   அணு ஆயுத ஒழிப்பு குறித்து நாங்கள் எங்கள் பேச்சு வார்த்தைகளில் விவாதித்தோம்.   இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்க பூர்வமானது” என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வட கொரிய வெளியுறவுத் துறை ஒரு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.  அந்த அறிக்கையில், ”அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ இந்த ஒப்பந்தம் குறித்து நடத்திய பேச்சு வார்த்தைகள் கவலை அளிப்பதாக உள்ளது.    வடகொரியாவை மிரட்டும் ஒரு தாதாவைப் போல் அமெரிக்கா நடந்துக் கொள்கிறது.

அமைச்சர் மைக் பாம்பியோ தனது பேச்சுவார்த்தையின் போது விவாதித்த கருத்துக்கள் டிரம்பின் ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.     அது மட்டுமின்றி அமெரிக்கா வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் மிகவும் பேராசை உள்ளவைகள் ஆகும்.   இது வட கொரிய உரிமைகளை வன்முறையாக பறிப்பது போல் உள்ளது.”  என கூறி உள்ளது.