பள்ளிக்கு நேரில் வரவேண்டும் – தேர்வுத்துறையின் ஏடாகூட உத்தரவு

--

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுத தவறிய மாணாக்கர்கள், பள்ளிக்கு நேரில் வந்து விருப்பக் கடிதம் தரவேண்டுமென்ற புதிய உத்தரவு, கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் படித்து, மார்ச் 24ம் தேதியன்று பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள், மறு தேர்வு எழுத விரும்புகின்றனரா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களை பள்ளிக்கு வரவழைத்து, தேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாணாக்கரின் பெயர், தேர்வு எண், தேர்வு மைய எண் போன்ற விபரங்கள், விண்ணப்பத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த விருப்பக் கடிதங்களை, வருகின்ற 26ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையால், பள்ளி மாணாக்கர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.

பள்ளிகளுக்கு, மாணாக்கர்கள் செல்வதற்கு போக்குவரத்து வசதிகளும் இல்லை. மேலும், கொரோனா பரவல் பிரச்சினையால், மாணாக்கர்கள் வீட்டில் இருந்து வெளியே போக முடியாத நிலையில், இந்த உத்தரவை எப்படி செயல்படுத்துவது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், இந்த உத்தரவு தொடர்பாக கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.