“இந்தியனுக்கே விசாரணையா? மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்….!

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது.

இரு வாரங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.

விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். சினிமா தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் லைகா நிறுவனம் கிரேன் ஆபரேட்டர் ராஜன், கிரேன் உரிமையாளர் மற்றும் தயாரிப்பு மேனேஜர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் படப்பிடிப்பின் போது பணிபுரிந்த 6 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அரங்கு அமைத்த மேலாளர் கிரேன் ஊழியர்கள் என 6 பேரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன் பின்னர் நடிகர் கமல் , இயக்குநர் சங்கர் உள்ளிட்ட இந்தியன் 2 பட குழுவினரிடம் விசாரணை நடத்த மத்திய குற்றபிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதேபோல் படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனை விசாரணை நடத்தியது தொடர்பாக, ‘ ‘இந்தியனுக்கே விசாரணையா? வீணர்களே என்ற தலைப்பில் மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து; இது தான் தமிழனின் கெத்து. குனிந்து கும்பிடு போடும் முட்டாள் அரசியல்வாதிகளே முடிந்தால் களத்தில் வந்து மோது. இல்லை தமிழ்நாட்டை விட்டு ஓடு’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.