கேந்திர வித்யாலயாவின் சர்ச்சைக்குரிய வினாத்தாள்! ஸ்டாலின், வைகோ கண்டனம்

சென்னை:

த்தியஅரசின் கீழ் வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில்,  சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிராக உள்ளதாக தமிழக அரசியல் கட்சகிள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க,ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் ஆகியோர்கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கேந்திர வித்யாலயா கேள்வித்தாளில்,  , தலித் என்றால் யார் என்று கேட்கப்பட்டு, அதற்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, ‘வெளிநாட்டினர்’, இன்னொன்று, ‘தீண்டத்தகாதவர்கள்’, ‘நடுத்தர வர்க்கத்தினர்’ மற்றும் ‘உயர் வர்க்கத்தினர்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதுபோல,  முஸ்லிம்கள் தொடர்பாக, உள்ள பொதுவான அபிப்பிராயம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டு, ‘முஸ்லிம்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதில்லை’, ‘அவர்கள் முழுக்க சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள்’, ‘நோன்பு காலகட்டத்தில் அவர்கள் தூங்குவது கிடையாது’, போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு, நான்காவது ஆப்ஷனாக, ‘இவை அனைத்தும்’ என்றும் ஒரு பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், 6 ஆம் வகுப்பு கேந்திரிய வித்யாலயா தேர்வில் சாதி பாகுபாடு மற்றும் வகுப்புவாதப் பிரிவைப் பரப்பும் கேள்விகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தேன்.

இந்த வினாத்தாளை தயாரிப்பதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் பொருத்தமான விதிகளின் கீழ் நிறுத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் வகையில் இடம்பெற்று இருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? முஸ்லீம்கள் யார்? தலித் என்றால் என்ன? தலித் தலைவர் யார்? என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. தலித்துகள் என்பதன் பொருள் என்ன? கேள்விக்கு விடையாக “அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர்” என்று பதில் தரப்பட்டுள்ளது. இந்த நான்கில் ஒன்றை மாணவர்கள் பதிலாக குறிப்பிட வேண்டும்.

இதே போன்று பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன? என்ற கேள்விக்கு, “முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள், நோன்பு காலங்களில் தூங்குவதில்லை” என்று பட்டியல் தரப்பட்டுள்ளது. டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, “பணக்காரர், ஏழை, தலித், பொருளாதாரம்” என்று 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தி உள்ள கேந்திர வித்யாலயா நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், வினாத்தாள்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கம்யூனிஸ்டு கனகராஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பள்ளி பிள்ளைகளிடம் கேட்கும் கேள்வியா இது? என்று கூறியவர், தேர்வில் இப்படியும் கேள்விகள், கேட்கப்படுமா என்று நினைக்குமளவுக்கு சர்ச்சைக்குரிய கேள்விகளை கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வில் எழுப்பியுள்ளார்கள் என்று கடுமையாக சாடி உள்ளார்.

You may have missed