போக்குவரத்து பெண் ஊழியர்களுக்கு இரவுப் பணி கூடாது – முதல்வரின் சர்ச்சைக் கருத்து!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், பெண் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்ச்சியலைகளை கிளப்பி வரும் நேரத்தில், போக்குவரத்துத் துறை பெண் ஊழியர்களுக்கு இரவுப் பணி வழங்கக்கூடாது என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பெண் டாக்டர் கொலை தொடர்பாக, டெல்லியிலும் போராட்டம் நடந்து வருவதோடு, பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. ஆனால், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவிடமிருந்து மட்டும் எந்தக் கருத்தும் வராமல் இருந்தது.

இந்நிலையில், போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இரவுப் பணி வழங்கக் கூடாது என்று பேசியுள்ளார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வரே இவ்வாறு பேசியுள்ளது கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

அதேசமயம், சந்திரசேகர ராவின் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி.ராமாராவ், பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டுவர பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.