ஐபிஎல் போட்டிக்கான புதிய டைட்டில் ஸ்பான்சருக்கும் எழுந்த எதிர்ப்பு – ஏன்?

துபாய்: அமீரக நாட்டில் நடைபெறவுள்ள 13வது ஐபிஎல் சீசனுக்கான புதிய டைட்டில் ஸ்பான்சர் மூலம், மற்றொரு சீன நிறுவனம் மறைமுக உள்நுழைந்துள்ளதால், பிசிசிஐ அமைப்பிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த நிறுவனம் சீனாவின் ‘வீவோ’. ஆனால், சீன எதிர்ப்பு காரணமாக அந்நிறுவனம் இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய டைட்டில் ஸ்பான்சராக ‘ட்ரீம் 11’ என்ற நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.

புதிய டைட்டில் ஸ்பான்சருக்காக, நடத்தப்பட்ட ஏலத்தில், ‘ட்ரீம் 11’ நிறுவனம் ரூ.222 கோடி ஏலம் எடுத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது இதில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ஏனெனில், ‘ட்ரீம் 11’ நிறுவனத்தின் பிரதானப் பங்குதாரராக இருப்பது சீனாவின் டென்சென்ட் குளோபல் நிறுவனம். இந்தக் காரணம்தான் தற்போதைய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

எனவே, பிசிசிஐ அமைப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தகர்கள் சங்கம்(சிஏஐடி) மற்றும் பீகார் கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.