டில்லி

டில்லி பல்கலைக்கழக வாயில் அருகே சாவர்க்கர் உள்ளிட்டோரின் சிலையை  ஆர் எஸ் எஸ் மாணவர் இயக்கமான ஏபிவிபி அமைத்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

டில்லி பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவை ஆர் எஸ் எஸ் அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி), காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் பேரவை (என் எஸ் யு ஐ) மற்றும் இடதுசாரி சங்கமான அகில இந்திய மாணவர் சங்கம் (ஏ ஐ எஸ் ஏ) ஆகியவை ஆகும். இந்த பல்கலைக்கழக மாணவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆனால் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பல்கலைக்கழகவ்வாயில் அருகே சாவர்க்கர், பகத் சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் சிலைகள் ஒரே பீடத்தில் ஏபிவிபி யால் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஏபிவிபி சங்கத் தலைவர் சக்தி சிங்,”நாங்கள் கடந்த நவம்பர் முதல் இந்த சிலைகளை வைக்கப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி கோரிவருகிறோம். ஆனால் அனுமதி அளிக்கவில்லை. நான் மீண்டும் இந்த மாதம் 9 ஆம்  தேதிக்குள் அனுமதியளிக்கக் கோரிக்கை விடுத்தேன். அதற்கும் பதில் வராததால் நாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்” எனக் கூறினார்.

இந்த சிலை அமைப்புக்குக் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சங்கத்தைச் சேர்ந்த அக்‌ஷய் லகரா, “சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பகத்சிங் குக்கு சமமாக அதே  மேடையில் சாவர்க்கர் சிலையை வைக்கக்கூடாது. இந்த சிலையை இன்னும் 24 மணி நேரத்துக்குள் நீக்கவில்லை எனில் நாங்கள் கடும் போராட்டம் நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இடது சாரி மாணவர் சங்கத் தலைவர் காவல்பிரீத் கவுர், “ஏபிவிபியின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அவர்கள் சாவர்க்கரின் சிலையை ஒரே  பீடத்தில் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பகத் சிங் சிலைகளுடன் வைத்தது தவறானது. இதன் மூலம் சாவர்க்கரின் கொள்கைகளை பகத் சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் கொள்கைகளுக்குச் சமமாகச் சித்தரிக்க நினைக்கின்றனர்” எனக் கூறி உள்ளார்.