போதைப்பொருள் கடத்தியதாக கைதான சப் -இன்ஸ்பெக்டருக்கு முதல்-அமைச்சரின் வீரதீர விருது..

ண்மை சம்பவங்களை சினிமாவில் பார்க்கும் போது ஏற்படும் விறுவிறுப்பை காட்டிலும் சில நேரங்களில் நிஜ நிகழ்வுகள், திரிலும், திகைப்புமாக இருப்பதுண்டு.

அப்படி ஒரு சம்பவம். மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் செயல்படும் காவல்துறை கமாண்டோ பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர், டெப்சன் சிங்.

சுதந்திரதினத்தை முன்னிட்டு காவல்துறையினருக்கு வழங்கப்படும் முதல் –அமைச்சரின் வீரதீர விருது, சப்- இன்ஸ்பெக்டர் டெப்சனுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.
தீவிரவாதிகளை மடக்கி அவர்களிடம் இருந்து பெருமளவிலான வெடிபொருட்களை பறிமுதல் செய்த சாதனைக்காக இந்த விருதுக்கு டெப்சன் சிங் பெயரை,, இம்பால் (கிழக்கு) காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரோஷன் சிங் என்பவர் பரிந்துரை செய்திருந்தார்.

விருது வழங்கிப்பேசிய மாநில முதல்-அமைச்சர்,’’ போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போரில் எனது அரசு தொடர்ந்து போராடும்’’ என்று பிரகடனம் செய்து, அந்த செய்தி ஊடகங்களில் பெரிய அளவில் ‘பிளாஷ்’ ஆகி இருந்தது.மறுநாள் செய்தியை படித்த மணிப்பூர் மாணவர் சங்க ஆட்களுக்கு பயங்கர அதிர்ச்சி.
ஏன்?

விருது பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் டெப்சன் சிங், கடந்த 2013 ஆம் ஆண்டு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்டிருத்ததே, அவர்கள் அலறலுக்கு காரணம். அந்த கடத்தல் வழக்கு காக்சிங் மாவட்ட காவல்நிலையத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த தகவலை மறைத்து விட்டு, டெப்சன், சப்- இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்துள்ளார்.

மாணவர் சங்கத்தினர், இந்த தகவலை ஊடகங்களில் தெரிவித்த பிறகே, டெப்சன் சிங்கின், சுயரூபம் அரசாங்கத்துக்கே தெரிய வந்துள்ளது.

சப்-இன்ஸ்பெக்டருக்கு வழங்கிய விருதை உடனடியாக பறித்ததோடு, அவரை சஸ்பெண்டும் செய்துள்ளது மணிப்பூர் மாநில அரசு. விருதுக்கு அவரை பரிந்துரை செய்த இன்ஸ்பெக்டர் ரோஷனும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் டெப்சன் சிங் போன்று வேறு யார், யார்? இதுபோல் உண்மைகளை மறைத்து வேலையில் சேர்ந்துள்ளனர், விருது பெற்றுள்ளனர் என்று விசாரணை நடத்தி, 7 நாட்களில் அறிக்கை தருமாறு மாநில ஐ.ஜி. ராதாஷியாம் சிங், பணிக்கப்பட்டுள்ளார்.

-பா.பாரதி.